மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சேதப்படுத்திய விவகாரம்: ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிலுவம்பட்டி ஊராட்சியில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட ரெட்டியார் தெருவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் (வயது 45) நல்ல நிலையில் இருந்த தண்ணீர் தொட்டியை எந்திரம் மூலம் துளையிட்டு சேதப்படுத்தியதாகவும், அதனால் தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கடந்த 25-ந் தேதி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளாளன் நல்லிபாளையம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை எதிர்காலத்தில் புதிய நீர்தேக்க தொட்டி கட்டினால் ஆதாயம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் சேதப்படுத்தியதாகவும், அதை தடுத்த பொதுமக்களை தகாத வார்த்தையால் பேசியதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரின்பேரில், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொதுமக்களை அவதூறாக பேசுதல் என 2 பிரிவுகளில் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் மீது நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.