ஏரியூர் அருகேபெண்ணுக்கு அடி- உதை; மாமியார் உள்பட 3 பேர் மீது வழக்கு
ஏரியூர்:
ஏரியூர் அருகே உள்ள சின்ன வத்தலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). திருப்பூரில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மஞ்சு (24). குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ரமேஷ் தான் இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வாட்ஸ்-அப் மூலம் மனைவிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சு கணவர் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த மாமியார் செல்லம்மாளுக்கும், மஞ்சுவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த செல்லம்மாள் மற்றும் உறவினர்களான அம்சா (45), முத்தையன் ஆகியோர் சேர்ந்து மஞ்சுவை அடித்து உதைத்து தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த மஞ்சு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான செல்லம்மாள் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.