வடமாநிலத்தவர் குறித்து அவதூறு கருத்தை பரப்பியவர் மீது வழக்கு


வடமாநிலத்தவர் குறித்து அவதூறு கருத்தை பரப்பியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 5 March 2023 6:45 PM GMT (Updated: 6 March 2023 11:16 AM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடமாநிலத்தவர் குறித்து அவதூறு கருத்தை பரப்பியவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடமாநிலத்தவர் குறித்து அவதூறு கருத்தை பரப்பியவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வடமாநில தொழிலாளர்கள்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ மற்றும் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம், கூட்டமாக தமிழ்நாட்டை விட்டு சொந்த மாநிலங்களுக்கு வெளியேறுவதாகவும் தவறான தகவல் பரவி வந்தது. இந்த வதந்திகள் தமிழ்நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த பிரச்சினை பீகார் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. எனவே இது தொடர்பாக உண்மை நிலையை கண்டறியும் வகையில் 4 அதிகாரிகள் அடங்கிய குழுவை பீகார் மாநில அரசு தமிழ்நாட்டுக்கு வைத்துள்ளது. இந்த குழுவினர் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அவதூறு வீடியோக்களை பரப்பி, செய்திகளை வெளியிட்டவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வழக்குப்பதிவு

இந்த விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஒரு நபர் டுவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் கருத்தை பதிவிட்டுள்ளார். இதில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் கொல்லப்பட்டுள்ளதாக கூறி இருந்தார். இது குறித்து விசாரிக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜகுமார் தாக்கூருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி விசாரணை நடத்தினார்.

இதில் சுபம் சுக்லா என்பவர், டுவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு இந்த பகுதியில் பாதுகாப்பு இல்லை என்ற தவறான கருத்தை பதிவிட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சுபம் சுக்லா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவர் எந்த பகுதியில் உள்ளார்? எங்கிருந்து இந்த தகவல் பரப்பப்பட்டது என்ற விவரங்களை கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story