கொடுமைப்படுத்துவதாக மனைவி புகார்: ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு
தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள தாசனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேதவள்ளி (வயது 20). இவருக்கும், அரியலூர் மாவட்டத்தில் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரியும் தொப்பூர் பகுதியை சேர்ந்த அசோக்குமார் (28) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் வேதவள்ளி தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் திருமணமான 6 மாதத்தில் இருந்து தனது கணவர், அவருடைய தந்தை அண்ணாமலை, கணவரின் சகோதரி தமிழ்ச்செல்வி ஆகியோர் தன்னை தரக்குறைவாக பேசி கொடுமைப்படுத்தியதாகவும், துணிகளை பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போலீஸ்காரர் அசோக்குமார் மற்றும் அண்ணாமலை, தமிழ்ச்செல்வி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.