2 திருமணத்தை மறைத்து பெண்ணுடன்குடும்பம் நடத்தியவர் மீது வழக்கு
தர்மபுரியில் 2 திருமணங்களை மறைத்து பெண்ணுடன் குடும்பம் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த பிறகு குட்டு அம்பலமானது.
வேலைவாய்ப்பு
தர்மபுரி குமாரசாமிபேட்டைபகுதியைச் சேர்ந்தவர் சிவன்யா (வயது 33). இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயக்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில்கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பாதிப்பு காரணமாக ஜெயக்குமார் இறந்துவிட்டார்.
இதுபற்றி ஜெயக்குமாருக்கு ஏற்கனவே அறிமுகமான நண்பரான பட்டுக்கோணம் பட்டியைச் சேர்ந்த பாபு (43) என்பவருக்கு தெரியவந்தது. இதனால் பாபு சிவன்யாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது அவருக்கு விதவை சான்றிதழ் வாங்கி தருவதாகவும், அதை பயன்படுத்தி வேலை வாய்ப்பு பெற்று தருவதாகவும் கூறியுள்ளார்.
கட்டாயப்படுத்தி தொடர்பு
இதை நம்பி சிவன்யா ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்தை பாபுவிடம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் சிவன்யாவின் வீட்டிற்கு பாபு வந்து சென்றுள்ளார். அப்போது சிவன்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் பாபுவுக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்திருப்பது சிவன்யாவுக்கு தெரியவந்தது. இதுபற்றி பாபுவிடம் அவர் கேட்டுள்ளார். மேலும் வேலை வாங்கி தருவதாக தன்னிடம் பெற்ற ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் தொகை குறித்தும் சிவன்யா கேட்டுள்ளார்.
கொலை மிரட்டல்
இதனால் ஆத்திரமடைந்த பாபு இது பற்றி வெளியே சொன்னால் உன்னையும் குழந்தையையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்து சிவன்யாவை வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிவன்யா இது பற்றி தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் விசாரித்தனர். இதைத்தொடர்ந்து மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.