தொலைபேசி கம்பங்களை திருடி விற்ற பி.எஸ்.என்.எல். என்ஜினீயர் மீது வழக்கு


தொலைபேசி கம்பங்களை திருடி விற்ற பி.எஸ்.என்.எல். என்ஜினீயர் மீது வழக்கு
x

நாமக்கல் அருகே பி.எஸ்.என்.எல். கம்பங்கள் திருட்டு போனது தொடர்பாக, இளநிலை என்ஜினீயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்

பி.எஸ்.என்.எல். கம்பங்கள் திருட்டு

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது46). இவர் நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இளநிலை தொலை தொடர்பு அலுவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 27-ந் தேதி நாமக்கல் அருகே உள்ள சாலபாளையம் பகுதியில், பி.எஸ்.என்.எல். கம்பங்களை சிலர் லாரியில் ஏற்றிக்கொண்டு இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து உதவி பொது மேலாளர் ஜான்மேசன் என்பவருடன் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளார். அப்போது அங்கு கம்பங்களை திருடிய நபர்கள் தப்பி ஓடி விட்டனர். 50 கம்பங்களுடன் லாரி நின்று கொண்டு இருந்தது. இதையடுத்து லாரி டிரைவர் உதவியுடன் நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் கொண்டு வந்து விசாரணை நடத்தி உள்ளனர்.

என்ஜினீயர் மீது வழக்கு

விசாரணையின் போது ஓமலூரை சேர்ந்த சிவராஜ் என்பவர், நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றி வரும் இளநிலை என்ஜினீயர் செல்வராஜ், தான் தனக்கு கம்பங்களை திருடி கொடுத்ததாகவும், அதற்கு உண்டான தொகையினை செல்வராஜிடம் கொடுத்து விட்டதாகவும் கூறினார். இதை தொடர்ந்து என்ஜினீயர் செல்வராஜிடம் விசாரணை நடத்தியபோது இதுவரை அவர் சுமார் 140 பி.எஸ்.என்.எல். கம்பங்களை திருடி விற்பனை செய்து இருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே 50 பி.எஸ்.என்.எல். கம்பங்களை திருடியதாக என்ஜினீயர் செல்வராஜ் மீது இளநிலை தொலை தொடர்பு அலுவலர் செந்தில்குமார் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story