அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள கலியுக மெய் அய்யனார் கோவிலில் நேற்று முன்தினம் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவையொட்டி மதகுபட்டி கிராமத்தார்கள் சார்பில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு உள்ள வயல்வெளியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிராமத்தின் சார்பில் ஜவுளி எடுத்துவரப்பட்டு வாடிவாசலில் உள்ள கோவில் காளைக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வயல்வெளியில் ஆங்காங்கே 100-க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் ஒரு சில காளைகள் மட்டுமே பிடிப்பட்டன. பல காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் சென்றது. இந்நிலையில் மஞ்சுவிரட்டை அனுமதியின்றி நடத்தியதாக பிரான்மலை கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.மங்கலம் போலீசார் பிரான்மலை பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த நல்லிக்காளை, மதகுபட்டியைச் சேர்ந்த மணி, மற்றும் அடியார்குளத்தைச் சேர்ந்த குமார், அழகன், சேவுகன் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து எஸ்.வி.மங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.