தொழிலாளியை தாக்கிய 10 பேர் மீது வழக்கு
தொழிலாளியை தாக்கிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூர் முல்லைநகரை சேர்ந்தவர் முருகன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர், அரப்படித்தேவன்பட்டியை சேர்ந்த கோயிலாண்டி என்பவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், அரண்மனைப்புதூரில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் முருகன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கோயிலாண்டி மற்றும் சிலர் ஒரு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை கொண்டு, முருகன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி கீழே விழச் செய்து காயங்கள் ஏற்படுத்தினர். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் செய்தார். அதன்பேரில் கோயிலாண்டி, முருகேசன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.