மோசடி செய்ததாக வீட்டுவசதி வாரிய அதிகாரி உள்பட 2 பேர் மீது வழக்கு
வீட்டு பத்திரத்தை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றி பதிந்து மோசடி செய்ததாக வீட்டுவசதி வாரிய அதிகாரி உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவை
வீட்டு பத்திரத்தை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றி பதிந்து மோசடி செய்ததாக வீட்டுவசதி வாரிய அதிகாரி உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:-
வீட்டுவசதி வாரிய வீடு
கோவையை சேர்ந்த போலீஸ் தம்பதி சுரேஷ்குமார்- ஜெயச்சந்திரிகா ஆகியோர் வீட்டுவசதி வாரியத்தில் வீடு விற்பனை திட்டத்தில் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு கடந்த 2003-ம் ஆண்டு ரூ.5 லட்சத்து 76 ஆயிரத்துக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் தவணை முறையில் பணம் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் வீடு தொடர்பான பொது அதிகாரத்தை (பவர்) கணபதி வ.உ.சி.நகரை சேர்ந்த சுசேந்திரன் என்பவரிடம் சுரேஷ்குமார் வழங்கினார். இதற்கிடையில் சுரேஷ்குமார் தவணை தொகையை முழுமையாக செலுத்தி முடித்தார்.
2 பேர் மீது வழக்கு
இந்த நிலையில் சுசேந்திரன், அவருக்கு வழங்கிய பவரை தவறாக பயன்படுத்தி, கோவை டாடாபாத்தில் வீட்டுவசதி வாரியத்தில் விற்பனை பிரிவு மேலாளராக பணியாற்றி வரும் ஸ்ரீதருடன் சேர்ந்து சுரேஷ்குமாருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை தனது பெயரில் பதிவு செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சுரேஷ்குமார்-ஜெயசந்திரிகா தம்பதியினர் இதுதொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில், ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு திவ்யா, வீட்டுவசதி அதிகாரி ஸ்ரீதர், சுசேந்திரன் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றார்.
வீட்டுவசதி அதிகாரி ஸ்ரீதர், மோசடி காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.