லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பெண்கள் மீது வழக்கு
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரிமளம் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக அரிமளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அரிமளம் அருகே உள்ள வையாபுரிபட்டி கடைவீதியில் அரிமளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் வடக்கு பொந்துபுளி கிராமத்தை சேர்ந்த செல்லப்பன் மனைவி சந்திரா (வயது 42), செம்புலிங்கம் மனைவி புஷ்பம் (42) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரியை விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் லாட்டரி சீட்டுகளை கே.புதுப்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் இருந்து பெற்று விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பிடிபட்ட பெண்களிடமிருந்து ரூ.3,240 மற்றும் 3 செல்போன்கள், 10 எண்ணிக்கை கொண்ட டிஜிட்டல் லாட்டரி பேப்பர்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு சந்திரா, புஷ்பம் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.