தொழில் அதிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு

இந்து மக்கள் கட்சி பிரமுகர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக சென்னை தொழிலதிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்து மக்கள் கட்சி பிரமுகர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக சென்னை தொழிலதிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஜோதிடர்
கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பிரசன்னசாமி (வயது 41). ஜோதிடர். இவர் இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணை தலைவராக உள்ளார்.
இந்த நிலையில் பிரசன்னசாமி, அவரது மனைவி அஸ்வினி உள்பட 4 பேர் மீது சென்னையை சேர்ந்த கருப்பையா (45) என்பவர் தனது இடப்பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி ரூ.25 லட்சம் மற்றும் 15 பவுன் நகையை பெற்று மோசடி செய்து விட்டதாக செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் பிரசன்னசாமி, அவரது மனைவி அஸ்வினி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தற்கொலை முயற்சி
இதனால் மனவேதனை அடைந்த பிரசன்னசாமி, அவரது மனைவி அஸ்வினி, மகள் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர் தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத் தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தாய் கிருஷ்ணகுமாரி இறந்தார்.
பிரசன்னசாமி, மனைவி அஸ்வினி, அவர்களது மகள் ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடம் செல்வபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மனவேதனை
அப்போது பிரசன்னசாமி, போலீசாரிடம் சென்னையை சேர்ந்த கருப்பையா இடம் பிரச்சினை சம்பந்தமாக என்னை அணுகினார்.
அப்போது நான் புதிதாக கட்டிவந்த கோவிலுக்காக கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 லட்சம் கொடுத்தார். பின்னர் ரூ.75 ஆயிரம் காசோலை கொடுத் தார். இதையடுத்து பிரதோஷ பூஜைக்காக 6 முறை ரூ.2 ஆயிரம் கொடுத்தார்.
ஆனால் நான் அவரிடம் ரூ.25 லட்சம் மற்றும் 15 பவுன் நகை வாங்கி மோசடி செய்து விட்டதாக போலீசில் புகார் அளித்து உள்ளார். இதனால் மனவேதனை அடைந்த நான் மற்றும் குடும்பத்தினர் தற்கொலைக்கு முயன்றோம் என்று கூறினார்.
3 பேர் மீது வழக்கு
அதன் பேரில் கருப்பையா, அவரது மனைவி ரத்னபிரியா மற்றும் சங்கர் ஆகிய 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக (சட்டப்பிரிவு 306) செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






