சேலத்தில் கலவை எந்திர வாகன கண்ணாடி உடைப்பு: நெடுஞ்சாலைத்துறை பெண் அதிகாரி உள்பட 3 பேர் மீது வழக்கு


சேலத்தில் கலவை எந்திர வாகன கண்ணாடி உடைப்பு: நெடுஞ்சாலைத்துறை பெண் அதிகாரி உள்பட 3 பேர் மீது வழக்கு
x

சேலத்தில் மாநகராட்சி பணியில் ஈடுபட்ட கலவை எந்திர வாகன கண்ணாடியை உடைத்த புகாரில் நெடுஞ்சாலைத்துறை பெண் அதிகாரி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

கண்ணாடி உடைப்பு

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் கட்டுமான நிறுவனம், சேலம் மாநகராட்சி பகுதியில் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னம்மாபேட்டை அண்ணாநகர் முதல் தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதற்காக சிமெண்டு, ஜல்லிக்கற்கள் கலவை செய்யும் எந்திரம் வரவழைக்கப்பட்டு இருந்தது. அந்த எந்திரத்தில் இருந்து சிமெண்டு கலவையை தொழிலாளர்கள் இறக்கி கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக காரில் வந்த பெண் உள்ளிட்ட 3 பேர் ஏன் வழியில் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்டனர். பின்னர் அவர்கள் கலவை எந்திர வாகன டிரைவர் சிவபிரசாந்த் (வயது 27) என்பவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து தாக்கியுள்ளனர். மேலும், கலவை எந்திர வாகனத்தின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.

3 பேர் மீது வழக்கு

சேலத்தில் மாநகராட்சி பணியில் ஈடுபட்டிருந்த வாகனத்தை சேதப்படுத்தியது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் டிரைவர் சிவபிரசாந்த் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பூரில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் வளர்மதி மற்றும் அவரது மகன் ராஜாராமன் உள்பட 3 பேர் சேர்ந்து சிவபிரசாந்துக்கு மிரட்டல் விடுத்து அவரது கலவை எந்திர வாகனத்தின் கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது.

இதையடுத்து திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை பெண் அதிகாரி வளர்மதி உள்பட 3 பேர் மீது அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story