திருநங்கைகள் உள்பட 4 பேர் மீது வழக்கு
கூடுதல் வட்டி கேட்டு தாய்-மகளை தாக்கிய திருநங்கைகள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவை சொக்கம்புதூர் கருப்பண்ணபாதையை சேர்ந்தவர் சிந்து (வயது 30). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். கடன் தொகைக்கு வட்டியும், முதலுமாக சேர்த்து சிந்து பணத்தை கட்டி முடித்ததாக தெரிகிறது. ஆனால் கூடுதல் வட்டி தொகை கேட்டு ஈஸ்வரி, சிந்துவிடம் பிரச்சினை செய்து வந்தார்.
இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று சிந்து வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஈஸ்வரி மற்றும் திருநங்கைகள் 3 பேர் சிந்துவிடம் மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்தனர். இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரி மற்றும் 3 திருநங்கைகள் சேர்ந்து சிந்து மற்றும் அவரது தாய் சுனிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி மிரட்டி சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஈஸ்வரி மற்றும் 3 திருநங்கைகள் மீது செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.