பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
பெண்ணை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல்குடி ஊராட்சிக்குட்பட்ட மயிலாடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 50). இவருக்கும் அஜய், கட்டாரி, சண்முகநாதன், சித்தநாதன் ஆகியோருக்கு இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. இந்தநிலையில் நாகேஷ் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அஜய் ஹாரனை அடித்ததால் மாடுகள் அங்கிருந்து ஓடின. இதனை நாகேஷ் மற்றும் அவரது மனைவி விஜயா ஆகியோர் தட்டி கேட்டுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த அஜய், கட்டாரி, சண்முகநாதன், சித்தநாதன் ஆகியோர் விஜயாவை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த விஜயாவை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து விஜயா அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் பெண்ணை தாக்கிய அஜய் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.