தொழில் அதிபரை மிரட்டி சொத்துகளை எழுதி வாங்கிய 4 பேர் மீது வழக்கு


தொழில் அதிபரை மிரட்டி  சொத்துகளை எழுதி வாங்கிய 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 Aug 2023 1:00 AM IST (Updated: 4 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தொழில் அதிபரை கடத்தி சென்று மிரட்டி சொத்துகளை எழுதி வாங்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கோயம்புத்தூர்
சரவணம்பட்டி


தொழில் அதிபரை கடத்தி சென்று மிரட்டி சொத்துகளை எழுதி வாங்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தொழில் அதிபர்


கோவையை அடுத்த காளப்பட்டி நேருநகரை சேர்ந்தவர் அழகர் ராஜா (வயது37). தொழில் அதிபர். கோவை சித்ரா பகுதியை சேர்ந்த குமாரசாமியின் மனைவி நித்யா (36).


இவர்கள் 2 பேரும் சேர்ந்து பீளமேடு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் அலுவலகத்தை கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வந்தனர். அப்போது, அழகர்ராஜா, நித்யாவுக்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கொடுக்கல் வாங்கல் காரணமாக அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அழகர்ராஜா அந்த அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.


காரில் கடத்தல்


சம்பவத்தன்று அழகர்ராஜா தனது காரில் பெரியநாயக்கன் பாளையம் செல்வதற்காக விளாங்குறிச்சி 80 அடி சாலை வழி யாக சென்று கொண்டிருந்தார். அப்போது நித்யாவின் கணவர் குமாரசாமி உட்பட 3 பேர் காரில் வந்து அழகர்ராஜாவை வழிமறித்தனர்.

பின்னர் அவர்கள், பண பிரச்சினை தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி அழைத்து உள்ளனர். ஆனால் அவர் வர மறுத்து உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து அழகர்ராஜாவை மிரட்டி காரில் கடத்தி துடியலூர் இடையர்பாளையத்தில் உள்ள சண்முகம் என்பவரது வீட்டிற்கு கொண்டு சென்றனர்.


சொத்தை எழுதி வாங்கினர்


அங்கு, அவர்கள் அழகர்ராஜாவை அறையில் பூட்டி வைத்து மிரட்டி சொத்து ஆவணங்களில் கையெழுத்து வாங்கி உள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்கசங்கிலி, 4 பவுன் காப்பு, ¾ பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர்.


மறுநாள் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள சார்- பதிவாளர் அலுவலகத்திற்கு அழகர்ராஜாவை அழைத்துச்சென்று அவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை சண்முகம் என்பவரது பெயருக்கு கிரையம் செய்து உள்ளனர்.

மேலும் அழகர்ராஜாவின் சொகுசு காரையும் விற்பனை செய்தது போல மிரட்டி கையெ ழுத்து வாங்கி உள்ளனர்.


4 பேர் மீது வழக்கு


மேலும் இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி அழகர்ராஜாவை பீளமேட்டில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தொழில் அதிபர் அழகர்ராஜாவை கடத்தி சென்று நகைகளை பறித்து, சொத்து மற்றும் சொகுசு காரை எழுதி வாங்கிய 4 பேர் மீது கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story