5 பேர் மீது வழக்கு
போடி அருகே முன்விரோதத்தில் தகராறில் ஈடுபட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடி அருகே உள்ள பொட்டல்களம் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டியன் (வயது 40). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கருப்பு காளை என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அதில் பால்பாண்டியன் மற்றும் அவருடைய தம்பி சவுந்திரபாண்டி இருவரும் சேர்ந்து கருப்பு காளை வீட்டுக்கு சென்று அவரை தாக்கியதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கருப்பு காளை, ரமேஷ் மற்றும் சின்னன் ஆகியோர் பால்பாண்டியன் வீட்டுக்கு சென்றனர். அங்கு வீட்டில் இருந்த பால்பாண்டியன் மற்றும் அவருடைய தந்தை பம்பையன் (70), தாய் பஞ்சவர்ணம் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போடி தாலுகா போலீசில் பால்பாண்டியன் கொடுத்த புகாரின்பேரில், கருப்பு காளை உள்பட 3 பேர் மீதும், கருப்பு காளை கொடுத்த புகாரின்பேரில் பால்பாண்டியன், சவுந்திரபாண்டி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.