பெண்களை தாக்கிய 7 பேர் மீது வழக்கு
பெண்களை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அரிமளம் அருகே ஏத்தநாடு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மனைவி இந்திராணி (வயது 56). இவர் வீட்டின் அருகே வசிக்கும், கோபால் குடும்பத்தினர் இந்திராணி வீட்டு அருகே விறகு சேகரித்து வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திராணி கோபால் குடும்பத்தினரிடம் கேட்டுள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோபால் உட்பட 3 பேர் சேர்ந்து இந்திராணி மற்றும் அவரது உறவினர் பிரியா (31) ஆகிய 2 பேரையும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த 2 பேரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதேபோல் நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகா (60). இவரது உறவினரான கருப்பையா என்பவருக்கும் இவருக்கும் நிலம் பிரித்து கொடுக்கப்பட்டது. இந்த நிலம் சம்பந்தமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கருப்பையா குடும்பத்தை சேர்ந்த கருப்பையா உள்பட 4 பேர் மல்லிகாவை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த மல்லிகா அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.