இரணியல் சார்பதிவாளர் உள்பட 8 பேர் மீது வழக்கு
இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.4½ லட்சம் சிக்கிய விவகாரத்தில் சார்பதிவாளர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜன்னலில் மறைத்து வைத்த பணமும் சிக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
நாகர்கோவில்:
இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.4½ லட்சம் சிக்கிய விவகாரத்தில் சார்பதிவாளர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜன்னலில் மறைத்து வைத்த பணமும் சிக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை
குமரி மாவட்டம் இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு புரோக்கர்கள் மூலம் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பீட்டர்பால் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அலுவலகத்தில் ஒரு அறையில் மேஜைக்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அந்த வகையில் மொத்தம் ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 800 இருந்தது. இந்த பணம் குறித்து எந்த கணக்கும் இல்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக பதிவாளர் (பொறுப்பு) சுப்பையா மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
8 பேர் மீது வழக்கு
இதற்கிடையே போலீசார் நடத்திய சோதனையில் புரோக்கர்களும் சிக்கினர். இதைத் தொடர்ந்து சார் பதிவாளர் (பொறுப்பு) சுப்பையா மற்றும் பிடிபட்ட புரோக்கர்களான நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற ரகு (வயது 40), சரல்விளையை சேர்ந்த ஜெயா (43), கலை செல்வன் (36), பள்ளியாடியை சேர்ந்த ராஜேஷ் (35), புலியூர்குறிச்சியை சேர்ந்த குமார் (49), வடலிவிளையை சேர்ந்த சுஜி (40) மற்றும் இரணியலை சேர்ந்த சுபாஜினி (28) ஆகிய 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணக்கில் வராத பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை சாா்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடியின் பின்புறம் 500 ரூபாய் நோட்டு கட்டு ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் உடனே லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த பணத்தை கைப்பற்றினர்.
வேண்டுமென்றே...
இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்டபோது, "இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்திய போது கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 800 சிக்கியது. இச்சம்பவத்தில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அறிக்கை தயார் செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கிடையே சார் பதிவாளர் அலுவலக ஜன்னலில் பணம் இருந்தது தொடர்பாக தகவல் கிடைத்தது. ஆனால் அந்த பணத்தை வேறு யாராவது வேண்டும் என்றே வைத்துவிட்டு தகவல் தெரிவித்து இருக்கலாம். எனினும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.