தொழிலாளியிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண் மீது வழக்கு
கோவையில் தொழிலாளியிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவையில் தொழிலாளியிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசில் புகார்
கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 34), தொழிலாளி. இவர் பெரியகடை வீதி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார் அதில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த சந்திரா (50) என்பவரிடம் ரூ.30 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கினேன். சில காரணங்களால் என்னால் 2 மாதம் வட்டி கொடுக்க முடியவில்லை. இதனால் மீண்டும் அவரிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கினேன். தற்போது நான் ரூ.44 ஆயிரம் திரும்ப செலுத்தி உள்ளேன்.
பெண் மீது வழக்கு
ஆனால் தற்போது நீ கொடுத்தது வட்டி மட்டும்தான், என்னிடம் வாங்கிய கடன் தொகை ரூ.60 ஆயிரத்தை கொடுக்க வேண்டும் என்று என்னிடம் சந்திரா கூறுவதுடன், என்னிடம் வட்டி கேட்டு மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து விசாரித்த போலீசார், சந்திரா மீது அதிக வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.