பாம்பே சர்க்கஸ் உரிமையாளர், மேலாளர் மீது வழக்கு
நாய்கள், கிளிகளை துன்புறுத்துவதாக கோவையில் நடத்தப்பட்டு வரும் பாம்பே சர்க்கஸ் உரிமையாளர், மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
நாய்கள், கிளிகளை துன்புறுத்துவதாக கோவையில் நடத்தப்பட்டு வரும் பாம்பே சர்க்கஸ் உரிமையாளர், மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தி கிரேட் பாம்பே சர்க்கஸ்
கோவை வ.உ.சி. மைதானத்தில் புகழ்பெற்ற தி கிரேட் பாம்பே சர்க்கஸ் என்ற சர்க்கஸ் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இங்கு பிற்பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு7 மணிக்கு என்று தினமும் 3 காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் வசதிக்காக வார இறுதி நாட்களில் மட்டும் கூடுதலாக இரவு 9.15 மணி என்று 4 காட்சிகள் நடத்தப்படுகிறது. இந்த சர்க்கசில் ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டு 30-க்கும் மேற்பட்ட சாகசங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதுபோன்று இங்கு வெளிநாட்டு வகையை சேர்ந்த நாய்கள், கிளிகளும் பல சாகசங்களில் ஈடுபடுகிறது.
தனியார் அமைப்பு புகார்
இந்த நிலையில் பி.எப்.சி.ஐ. (இந்திய கால்நடைகளுக்கான மக்கள் இயக்கம்) என்ற தனியார் அமைப்பை சேர்ந்த ஜி.அருண் பிரசன்னா கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடத்தப்பட்டு வரும் தி கிரேட் பாம்பே சர்க்கசில் கிளி, நாய் வகைகள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றுக்கு இந்த சர்க்கசை நடத்தி வருபவர்கள் முறையான உணவு வழங்கவில்லை. அத்துடன் விலங்கு பறவைகளை சாகசத்தில் ஈடுபடுத்த அனுமதியும் பெறவில்லை.
கிளியின் கால்பகுதியில் காயம் இருப்பதை பார்க்கும்போது சர்க்கஸ் நடத்தி வரும் உரிமையாளர், மேலாளர் அவற்றை துன்புறுத்தி உள்ளனர். எனவே இது தொடர்பாக தாங்கள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
உரிமையாளர் மீது வழக்கு
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, தி பாம்பே கிரேட் சர்க்கஸ் உரிமையார் மற்றும் மேலாளர் மீது மிருகவதை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.