துணை மின் நிலையம் பகுதியில் மயானம் அமைத்ததற்கு எதிராக வழக்கு: மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் உடல்கள் புதைக்கப்பட்டால் தோண்டப்படும் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை
மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் உடல்கள் புதைக்கப்பட்டு இருந்தால் அவை தோண்டி எடுக்கப்பட்டு மாற்று இடத்தில் புதைக்க உத்தரவிட நேரும் என மதுரை ஐகோர்ட்டு எச்சரித்தது.
மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் உடல்கள் புதைக்கப்பட்டு இருந்தால் அவை தோண்டி எடுக்கப்பட்டு மாற்று இடத்தில் புதைக்க உத்தரவிட நேரும் என மதுரை ஐகோர்ட்டு எச்சரித்தது.
குடியிருப்பு பகுதிக்குள் மயானம்
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை சேர்ந்த முருகேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டம் வேம்பூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதே பகுதியில் பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளன. வேம்பூர் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு மயானம் இருந்தது. பின்னர் அந்த இடம் பயன்படுத்தப்படாமல் இருந்ததால் அங்கு, மின் வாரிய அலுவலகம் செயல்பாட்டுக்கு வந்தது. அதன்பின்னர் மின்வாரியப் பகுதியில் விநாயகர் கோவிலும் கட்டப்பட்டது.
ஒருதலைபட்சமாக அதிகாரிகள்
இந்தநிலையில் இப்பகுதி மக்களிடம் எந்தவொரு கருத்தும் கேட்காமல், குழு விசாரணையையும் நடத்தாமல் அதே இடத்தில் மயானம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக மாவட்ட நிர்வாகம், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
இதனால் இந்த கிராமத்தில் குடியிருப்போர் அனைவரும் மன உளைச்சலோடும், அச்ச உணர்வோடும் உள்ளனர். எனவே வேம்பூரில் மின்வாரிய அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் உள்ள இடத்தில், மின் மயானம் அமைக்கவோ, இறந்தவர்களின் உடலை புதைக்கவோ தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, "மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் துணை நிலையத்திற்கு வெளியேதான் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன" என தெரிவித்தார்.
நீதிபதிகள் எச்சரிக்கை
அதற்கு நீதிபதிகள், மனுதாரர் குறிப்பிடும் இடம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமானது. அந்த இடத்தில் ஏதேனும் உடல்கள் புதைக்கப்பட்டு இருந்தால், அந்த உடலை தோண்டி உரிய இடத்தில் புதைக்க உத்தரவு பிறப்பிக்க நேரிடும், என எச்சரித்தனர்.
விசாரணை முடிவில், இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கண்காணிப்பு பொறியாளருடன் இணைந்து, சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆய்வின் போது குஜிலியம்பாறையின் தாசில்தார் உடன் இருக்கக்கூடாது. பழனி வருவாய் மண்டல அலுவலர்தான் ஆய்வின்போது, உடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.