முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கு ரத்து


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கு ரத்து
x

உள்ளாட்சி தேர்தலின் போது விதிகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பதிவான வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுகவினர் அத்துமீறி வாக்குச்சாவடிக்கு நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக புகார் எழுந்தது. அப்போது அதற்கு எதிரான அதிமுகவினர் ஜெயகுமார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 144 தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு சட்டத்தின் கீழ் நோய் பரவ காரணமாக இருந்ததாகக் கூறி 4 பிரிவுகளில் போலீசார் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாகவும் இதை தட்டி கேட்ட போது தாக்குதல் மற்றும் கல் எறிதல் சம்பவங்களில் திமுகவினர் ஈடுபட்டதாகவும், அது குறித்து காவல்துறைக்கு புகார் அளித்ததாகவும், ஆனால் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யாமல் போலீசார் தன் மீது வழக்கு பதிவு செய்ததால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ராயபுரம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதேபோல் நில அபகரிப்பு வழக்கில் ஜெயகுமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனை முழுவதையும் தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும் அவரது சகோதரர் மகேஷ்குமார் இருவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. அப்போது தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாக அமைச்சர் ஜெயக்குமார் மீது மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் கைதான ஜெயக்குமார் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் திருச்சியில் தங்கி இருந்து இருவாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்றும் அதன் பிறகு சென்னையில் திங்கட்கிழமை தோறும் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை வழங்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் அவர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்னிலையில் ஆஜராகி வந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது வாரம் திங்கட்கிழமை களில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் அந்த நிபந்தனையையும் முழுவதுமாக தளர்த்தக் கோரி ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தான் ஆஜராகும் போது தனது ஆதரவாளர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கூடுவதால் தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினை போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை முழுவதுமாக தளர்த்தி உத்தரவிட்டார்.


Next Story