வங்கி காசாளரை தாக்கிய மேலாளர் மீது வழக்கு


வங்கி காசாளரை தாக்கிய மேலாளர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வங்கி காசாளரை தாக்கிய மேலாளர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

விழுப்புரம்

திருக்கோவிலூர் தாலுகா கழுமரம் பகுதியைச் சேர்ந்தவர் பூங்குன்றன் (வயது 35). இவர் மத்திய கூட்டுறவு வங்கியின் காணை கிளையில் காசாளராக பணியாற்றி வருகிறார். அதே வங்கியில் மேலாளராக கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா லட்சுமிநாராயணபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் (54) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் இவர்கள் இருவரும் மற்றும் வங்கி ஊழியர்களும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நகை மதிப்பீட்டாளர் சரிவர பணிக்கு வராத நிலையில் ஏன் ஊதியம் வழங்குகிறீர்கள் என்று சக்திவேலிடம் பூங்குன்றன் கேட்டுள்ளார். அதற்கு சக்திவேல், நான்தான் வங்கி மேலாளர், எதுவாக இருந்தாலும் நான்தான் பதில் சொல்லப்போகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சக்திவேல், உணவு பாத்திரத்தால் பூங்குன்றனை தாக்கினார். இதில் காயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து பூங்குன்றன், காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சக்திவேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story