போக்சோ சட்டத்தில் ஆசிரியர் மீது வழக்கு


போக்சோ சட்டத்தில் ஆசிரியர் மீது வழக்கு
x

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்

8 ஆண்டுகளாக...

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெரியம்மாபாளையத்தில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, புல்லா கவுண்டனூரை சேர்ந்த பெரியசாமி மகன் செல்வகுமார் (வயது 33) என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 6, 7, 9, 10-ம் வகுப்புகளுக்கு ஆங்கிலம் பாடம் நடத்தி வந்தார். இவர் தற்போது பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் கே.கே.நகரில் வசித்து பள்ளிக்கு சென்று வந்தார்.

புகார்கள்

மேலும் அவர் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தினமும் மாலையிலும், சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பும் நடத்தி வந்தார். இந்த நிலையில் அந்த பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக பொதுமக்களின் மூலம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதன்பேரில் குழந்தைகள் நலக்குழுமத்தினர் பள்ளிக்கு சென்று பள்ளி மாணவிகளிடம் விசாரணை செய்தனர். அதில் ஆசிரியர் செல்வகுமார் பள்ளி மாணவிகளை தவறாக தொடுதலும், தவறான பார்வையும், மற்றும் குறிப்பிட்ட மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார் நன்னடத்தை அலுவலர் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் நேற்று மதியம் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் செல்வகுமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆசிரியர் செல்வகுமாரை உடனடியாக கைது செய்யக்கோரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும், அதன் அமைப்புகளும் நேற்று காலை பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story