ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட வாலிபர் மீது வழக்கு
ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட வாலிபர் மீது வழக்கு
ராமநாதபுரம்
கோவையில் இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் மிரட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட வாலிபர் மீது போலீசார் ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆயுதங்களுடன் வீடியோ
கோவையில் வாலிபர்கள் சிலர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கரமான ஆயுதங்களுடன் மிரட்டும் வகையில் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். இவ்வாறு வீடியோ வெளியிடுவதால் இருதரப்புக்கும் இடையே மோதல் உருவாகி கொலை சம்பவங்கள் அரங்கேறும் நிலையும் இருந்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மோதலில் குரங்கு ஸ்ரீராம் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரை கொலை செய்த கும்பலை சேர்ந்த கோகுல் என்பவரை கோர்ட்டு அருகே குரங்கு ஸ்ரீராம் கூட்டாளிகள் கொலை செய்தனர். போலீசாரின் விசாரணையில் இவர்களில் இரு தரப்பினரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டதில் முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாநகர சைபர் கிரைம் போலீசார் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்யும் பணியை தீவிரமாக தொடங்கினர்.
வாலிபர் மீது வழக்கு
அதன்படி இதுவரை இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் ஆயுதங்களுடன் மிரட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட பெண் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் யாராவது வீடியோ வெளியிட்டு உள்ளனரா? என்று கண்காணித்து வந்தனர். அப்போது புலியகுளத்தை சேர்ந்த தருண் என்ற இன்பன்ராஜ் (வயது 24) என்பவர் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டது தெரிய வந்தது.
மேலும் போலீசார் தொடர்ந்து அவர் குறித்து ஆய்வு செய்ததில் அவர் மீது ஏற்கனவே 2 கஞ்சா வழக்கும் பதிவாகி உள்ளது தெரிய வந்தது. இது குறித்து ராமநாதபுரம் போலீசார் இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட தருண் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து அவரை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்
கோவை மாநகரில் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்கள், அவர்களது சமூக வலைத்தள பக்கங்களில் பொறுப்பற்றவகையிலும், சட்டம் பற்றிய புரிந்துணர்வு இல்லாமலும், சுய விளம்பரங்களுக்காகவும், கைகளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொண்டு வீடியோக்கள், புகைப்படங்களை பதிவேற்றம் செய்கின்றனர். மேற்படி ஆயுதங்களை காட்டி புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது சட்டப்படி குற்றமாகும். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களை காண்பித்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கோவை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். எனவே சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் சமூக அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும், சட்டம் குறித்த எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். யாராவது தேவையற்ற வகையில் பிறர் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, சுய விளம்பரத்திற்காகவோ அல்லது போட்டிக்காகவோ கைகளில் ஆயுதங்களுடன் புகைப்படம் அல்லது வீடியோ அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டால் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.