நகைப்பட்டறை தொழிலாளியை கொல்ல சதி திட்டம் திட்டிய வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்


நகைப்பட்டறை தொழிலாளியை கொல்ல சதி திட்டம் திட்டிய வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மாமனாரை கொலை செய்ய சதி செய்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டது.

கோயம்புத்தூர்


கோவையில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மாமனாரை கொலை செய்ய சதி செய்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டது.

காதல் திருமணம்

கோவை செல்வபுரத்தில் வசித்து வந்தவர் குமரேசன், நகைப்பட்டறை தொழிலாளி. இவருடைய மகன் அருண்குமார் (வயது 24). இவர் கீரணத்தத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அதே ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த திருவாரூரை சேர்ந்த சஹானா ஹாஷ்மி என்பவரை அருண்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அந்த பெண் இந்து மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சஹானா ஹாஷ்மியின் தாயார் நூர்நிஷா (46) தனது மகள் சஹானா ஹாஷ்மி இந்து மதத்திற்கு மாறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அருண்குமாரை மதம் மாறும்படி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து காதல் தம்பதியினர் நூர் நிஷாவிடம் இருந்து பாதுகாப்புக்கோரி கோவை செல்வபுரம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

கொலை செய்ய சதி

நூர்நிஷா முஸ்லிம் இயக்கத்தில் பொறுப்பு வகித்து வந்தார். ஆனால், அருண்குமார் வேறு மதத்துக்கு மாறுவதற்கு அவரது தந்தை குமரேசன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அருண்குமார் மதம் மாற மறுத்து விட்டார். இதையடுத்து நூர்நிஷா ஒரு கும்பலின் உதவியுடன் அருண்குமார் தந்தை குமரேசனை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியதாக தெரிகிறது. இதற்கு சதாம் உசேன், மற்றும் பக்ருதீன் ஆகியோர் நூர்நிஷாவுக்கு உதவியுள்ளனர்.

இந்த நிலையில் அந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராம்வீரிடம் இருந்து உரிமம் இல்லாத துப்பாக்கியை வாங்க கும்பல் திட்டமிட்டது தெரியவந்தது. இந்த கொலை சதி திட்டம் தொடர்பாக நூர்நிஷா, திருச்சியை சேர்ந்த சதாம் உசேன், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம்வீர், சென்னை கொடுங்கையூரை சேர்ந்த பக்ருதீன், திருச்சியை இம்ரான்கான், ஈரோடு பெருந்துறையை சேர்ந்த முகமது அலி ஜின்னா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சட்டவிரோத தடுப்பு சட்டத்தின்கீழ் (உபா) வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. பிரிவிற்கு மாற்றம்

இந்த வழக்கை சென்னை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றுமாறு கோவை நகர காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வுக்கு (சி.ஐ.டி.) மாற்றி தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை செல்வபுரம் போலீசார் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு போலீசாரிடம் வழங்கினர். இந்த வழங்கின் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) பாபு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.


Next Story