கர்ப்பிணி உடலை வீட்டு வாசலில் புதைத்த 50 பேர் மீது வழக்கு
அன்னவாசல் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி உடலை வீட்டு வாசலில் புதைத்த 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கர்ப்பிணி தற்கொலை
அன்னவாசல் அருகே விளாப்பட்டி மேட்டுக்களம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 26). இவருக்கும், குளத்தூர் அருகே உள்ள மேல சவேரியார்பட்டினத்தை சேர்ந்த குமரன் மகள் நாகேஷ்வரி (22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் நாகேஷ்வரிக்கும், அவரது கணவர் குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த நாகேஷ்வரி கணவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
50 பேர் மீது வழக்கு
இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கமணி, விஜயராணி, அரவிந்த் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விஜயராணியின் சகோதரர் பால்ராஜ் அன்னவாசல் போலீஸ் நிலைத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அரவிந்த் வீட்டு முன்பு கர்ப்பிணி உடலை புதைத்த மேலசேவரியார்புரம் பகுதியை சேர்ந்த சண்முகம், அப்பாவு, சைவராசு, வெங்கடேஷ், ராஜா, மணி, வீரையா, பாலகிருஷ்ணன், திலகவதி, சின்னத்துரை, கண்ணன், பழனிச்சாமி, லெட்சுமணன் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.