பஞ்சாயத்து தலைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
பஞ்சாயத்து தலைவியை தாக்கிய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மானூர்:
மானூர் அருகே கானார்பட்டியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவருடைய மனைவி மெர்சி (வயது 32). இவர் கானார்பட்டி பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். இவர் சம்பவத்தன்று கணவர் பிரேம்குமாரிடம் தபால் கடிதத்தை பஞ்சாயத்து எழுத்தரிடம் கொடுக்குமாறு கூறினார். இதற்கு பிரேம்குமார் மறுப்பு தெரிவித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து மெர்சி தனது வீட்டின் பின்புறத்தில் தனியாக வசிப்பதற்காக ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையாலான கூடாரம் அமைக்க ஏற்பாடு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார், மனைவி மெர்சியை கம்பாலும், கல்லாலும் தாக்கி, கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
உடனே மெர்சியின் சகோதரரான காலின்ஸ், உறவினர்கள் அந்தோணியம்மாள், அதிசயம் ஆகியோர் பிரேம்குமாரை கம்பி மற்றும் கம்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த மெர்சி, பிரேம்குமார் இருவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து மெர்சி அளித்த புகாரின்பேரில், பிரேம்குமார் மீதும், பிரேம்குமார் அளித்த புகாரின்பேரில், மெர்சி, காலின்ஸ், அந்தோணியம்மாள், அதிசயம் ஆகிய 4 பேர் மீதும் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.