கேரளாவிடம் ஒப்படைக்கக்கோரி வழக்கு:அரிக்கொம்பன் யானையை குறிப்பிட்ட இடத்தில் விட வேண்டும் என உத்தரவிட முடியாது - கோரிக்கையை நிராகரித்த மதுரை ஐகோர்ட்டு
அரிக்கொம்பன் யானையை குறிப்பிட்ட இடத்தில்தான் விட வேண்டும் என உத்தரவிட முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்தது.
அரிக்கொம்பன் யானையை குறிப்பிட்ட இடத்தில்தான் விட வேண்டும் என உத்தரவிட முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்தது.
அரிக்கொம்பன் யானை
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரெபேக்கா ஜோசப், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
அரிக்கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் யானை சமீப நாட்களாக தேனி மாவட்டம் கம்பம் மலைப்பகுதியில் சுற்றித்திரிந்து மக்களை அச்சுறுத்தியது. இந்த யானையை கேரள அரசு கும்கியாக மாற்ற முயற்சி செய்தது. இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த யானையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர் அந்த யானை, பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் விடப்பட்டது. அங்கிருந்துதான் அந்த யானை கம்பம் பகுதியில் நுழைந்தது. சின்னக்கானல் பகுதியில் யானை பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால்தான் அவை ஊருக்குள் நுழையும் நிலை ஏற்பட்டது. ஆனால் சின்னக்கானல் பகுதி பழங்குடியினர், அரிக்கொம்பன் யானையை கடவுளின் குழந்தையாக பார்க்கின்றனர்.
இந்த காட்டு யானை அப்பகுதியிலேயே வசிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அரிக்கொம்பன் யானைக்கு ஏற்பட்டு உள்ள காயத்துக்கு உரிய சிகிச்சை அளித்து, அந்த யானையை கேரளாவிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
உத்தரவு பிறப்பிக்க முடியாது
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், சில முடிவுகளை அதிகாரிகள்தான் எடுக்க வேண்டும். இந்த வழக்கு விளம்பர நோக்கில் தாக்கல் செய்யப்பட்டதாக கருதுகிறோம். இந்த யானையை ஏராளமான தொகையை செலவு செய்து, தமிழக அரசு பிடித்து உள்ளது. யானையை குறிப்பிட்ட இடத்தில்தான் விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.
விசாரணை முடிவில், யானைகள், காடுகளை பாதுகாப்பது தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.