நடைபாதைகளில் விதிமீறி வைக்கப்பட்டுள்ள கம்பங்களை அகற்றக்கோரி வழக்கு
நடைபாதைகளில் விதிமீறி வைக்கப்பட்டுள்ள கம்பங்களை அகற்றக்கோரி வழக்கு: மாநகராட்சி ஆணையர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், மாற்றுத் திறனாளி பாவனா என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், "மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்ட விதிமுறைகளின்படி, நடைபாதையில் சக்கர நாற்காலிகள் செல்லும் வகையில் விதிமுறைகள்படி உரிய இடைவெளியில் தடுப்பு கம்பங்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், சென்னையில் பல இடங்களில் இந்த தடுப்பு கம்பங்கள் மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாக செல்ல முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன. விதிகளுக்கு முரணாக நடைபாதைகளில் தடுப்பு கம்பங்கள் அமைக்க தடை விதிக்க வேண்டும். விதிமீறி அமைக்கப்பட்டுள்ள கம்பங்களை அகற்றி, விதிகளின்படி அமைக்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், இந்த வழக்கிற்கு மாற்றுத்திறனாளி நலத்துறை ஆணையர், தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆகியோரை எதிர்மனுதாரராக மனுதாரர் சேர்க்க வேண்டும். இந்த வழக்கிற்கு, அவர்கள் உள்பட சென்னை மாநகராட்சி ஆணையர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 26-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.