கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறை கையகப்படுத்தக்கோரி வழக்கு- அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறை கையகப்படுத்தக்கோரி வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறை கையகப்படுத்தக்கோரி வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கோவில் திருவிழா
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பாரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிச்சை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
பாரைப்பட்டியில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் பாரைப்பட்டி, பெரியகுளம், சரந்தாங்கி, வெள்ளையம்பட்டி, மாணிக்கம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சொந்தமானது. இந்த கோவிலில் குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒரு முறை புரவி எடுப்பு திருவிழா நடைபெறும். ஆனால் சமீபகாலமாக இந்த கோவிலில் எந்த ஒரு திருவிழாவோ, முறையான பூஜையோ நடைபெறுவதில்லை. இந்த கோவிலுக்கு சொந்தமாக 15-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு திருவிழா, பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன.
பாதிப்பு
தற்போது இந்த நிலங்களை தனிநபர்கள் தங்களது அனுபவ பாத்தியத்தின்பேரில் வைத்துக் கொண்டு கோவிலுக்கு வருமானத்தை தருவதில்லை. கோவில் திருவிழாவை நடத்துவதில்லை. இதனால் 5 கிராம மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். எனவே பாரைப்பட்டி அய்யனார் கோவில் நிர்வாகத்தையும், சொத்துகளையும் அறநிலையத்துறை கையகப்படுத்தி முறையாக பூஜையையும், திருவிழாவையும் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் கார்த்திக் கண்ணா ஆஜராகி, இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் பூசாரி பெயரில் இருந்தன. பல்வேறு புகார்களின் அடிப்படையில் தற்போது அந்த நிலங்கள் கோவில் பெயருக்கு மாற்றி வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தையும் அறநிலையத்துறை கையகப்படுத்தினால் தான் கிராம மக்கள் பலன் அடைவார்கள் என்று வாதாடினார்.
முடிவில், இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.