வீணாகும் 86 மருத்துவ இடங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


வீணாகும் 86 மருத்துவ இடங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

அகில இந்திய ஒதுக்கீட்டில் 86 இளங்கலை இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இலச்சினை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இலச்சினை வெளியிட்டார்.

தரம் உயர்த்தல்

இதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சட்டசபையில், 'தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்ககம் தற்போது 36 மருத்துவக்கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் அதனை சார்ந்த மருத்துவ நிலையங்களின் செயல்பாடுகளை உள்ளடக்கியதாக உள்ளது. மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக மருத்துவக் கல்வி இயக்ககம், இனி வருங்காலங்களில் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் என்ற பெயரில் செயல்படும்' என்று அறிவிக்கப்பட்டது.

கடுமையான நோய்களில் இருந்து மக்களை காப்பது, நோய் வராமல் தடுப்பது போன்ற ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், புதிய மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொள்ளவும் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககமாக தரம் உயர்த்தப்பட்டு, 'இலச்சினை' அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 6 இளங்கலை மருத்துவ இடங்கள் கடந்த ஆண்டு நிரப்பப்படாமல் இருந்தன. நடப்பு ஆண்டு, 86 இடங்கள் நிரப்பப்படவில்லை. 'நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களை கவுன்சிலிங் நடத்தி நிரப்ப வேண்டும், இல்லையென்றால் மாநில அரசின் ஒதுக்கீட்டிற்கு தரவேண்டும்' என்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு இதுவரை பதில்கள் இல்லை.

துறையின் செயலாளர் இதுதொடர்பாக மத்திய அரசிடம் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலை பெற்று, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம், விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story