ஆந்திராவில் இருந்து 215 கிலோ கஞ்சா கடத்திய வழக்கு: கேரள வாலிபர்கள் 2 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்- மதுரை கோர்ட்டு தீர்ப்பு


ஆந்திராவில் இருந்து 215 கிலோ கஞ்சா கடத்திய வழக்கு: கேரள வாலிபர்கள் 2 பேருக்கு  10 ஆண்டு ஜெயில்- மதுரை கோர்ட்டு தீர்ப்பு
x

ஆந்திராவில் இருந்து 215 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கேரள வாலிபர்கள் 2 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

மதுரை


கடந்த 2020-ம் ஆண்டில் ஆந்திராவில் இருந்து திருச்சி வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மதுரை பாண்டிகோவில் ரிங் ரோடு பகுதியிலும் போலீசார் வாகனங்களை சோதனை செய்தனர்.

அப்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 215 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த காரில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ராபர்ட் விக்டர் (வயது 32), அகில்(30) ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் விஜயபாண்டியன் ஆஜரானார். விசாரணை முடிவில் 2 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் தீர்ப்பளித்தார்.


Next Story