மாணவரின் சான்றிதழ் வழங்காதது குறித்த வழக்கு:காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்டு- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மாணவரின் சான்றிதழ் வழங்காதது குறித்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மாணவரின் சான்றிதழ் வழங்காதது குறித்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சான்றிதழ் கேட்டு வழக்கு
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த பழனிசாமி, மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2020-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் கடந்த 1992 முதல் 1996-ம் ஆண்டு வரை திண்டுக்கல் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படிப்பை முடித்தேன். தேர்ச்சி பட்டியலில் எனது தேர்வு எண் இல்லை. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது பல்கலைக்கழகத்திற்கு சென்று விவரம் கேட்க சொன்னார்கள். பின்னர் பல்கலைக்கழகத்தில் கேட்டபோது முழுமையாக அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாதால் உங்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண் பட்டியல் வரவில்லை என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு அனைத்து தேர்வுகளையும் எழுதி தேர்ச்சி பெற்றேன்.
பின்னர் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல் கேட்டு விண்ணப்பித்தேன். இதுவரை மதிப்பெண் பட்டியல் தரவில்லை. எனவே எனது என்ஜினீயரிங் மதிப்பெண் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
பதிவாளருக்கு பிடிவாரண்டு
இந்த வழக்கு நீதிபதி பிடி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மதிப்பெண் தேர்ச்சி சான்றிதழ் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தார்.
அதாவது, பதிவாளரை வருகிற 7- ந் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.