காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான வழக்கு - சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
மது என்னும் தீய பழக்கத்திற்கு மக்கள் ஆளாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருக்க முடியாது என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
சென்னை,
டாஸ்மாக் கடைகளால் திரும்ப பெறப்பட்ட காலி மதுபாட்டில்களை பெறுவதற்காக ஒப்பந்தம் செய்தவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. அப்போது மதுபானக் கடைகளில் இருந்து பாட்டில்களை வாங்க தங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், பார் இல்லாத இடங்களிலும் புதிய டெண்டர் கோரப்பட்டதால் தங்கள் உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அரசு தரப்பில், மதுபானக் கடைகளில் திரும்ப பெறப்பட்ட பாட்டில்களை கொள்முதல் செய்ய மட்டுமே மனுதாரர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும், பார்களில் விட்டுச் செல்லப்பட்ட பாட்டில்களுக்கு உரிமை கோர முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மது என்னும் தீய பழக்கத்திற்கு மக்கள் ஆளாக வேண்டும் என மனுதாரர்கள், பார் ஒப்பந்ததாரர்கள், டாஸ்மாக் நிர்வாகம் என யாரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்க முடியாது என குறிப்பிட்ட நீதிபதிகள், காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுக்கும்போது அதற்கான 10 ரூபாயை சம்பந்தப்பட்ட பாரின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.