மாரிமுத்து எம்.எல்.ஏ. உள்ளிட்ட 100 பேர் மீது வழக்கு


மாரிமுத்து எம்.எல்.ஏ. உள்ளிட்ட  100 பேர் மீது வழக்கு
x

திருத்துறைப்பூண்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றியதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாரிமுத்து எம்.எல்.ஏ. உள்ளிட்ட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் சிறுவன் உள்பட 8பேரை கைது செய்தனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றியதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாரிமுத்து எம்.எல்.ஏ. உள்ளிட்ட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் சிறுவன் உள்பட 8பேரை கைது செய்தனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகள்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தலைக்காடு கண்ணன் மேடு பகுதியில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருப்பதாகவும் அதை அகற்ற வேண்டும் என்றும் அதே பகுதியைச் சேர்ந்த மாதாராமன்(வயது45) சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இதன் பேரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 3 வீடுகள் அகற்றப்பட்டன.பின்னர் இந்த பகுதி அரசியல் கட்சியினர் மற்றும் ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வீடுகளை இடிக்க வேண்டாம் இந்த வீடுகளால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை என கோரிக்கை மனு அளித்தனர். இருப்பினும் கோர்ட்டு உத்தரவை ஏன் அமல்படுத்தவில்லை என கோரி மாதாராமன், சார்பில் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சாலை மறியல்

இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என ேகாா்ட்டு உத்தரவிட்டது. இதன்பேரில் நேற்று முன்தினம் தலைக்காடு கண்ணன்மேல்பகுதிக்கு திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்கொடி, முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் கழனியப்பன், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். இதை கண்டித்து திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்வராசு, திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

8பேர் கைது

இந்தநிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாரிமுத்து எம்.எல்.ஏ. உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது சிலர்பொக்லின் எந்திரத்தை கல்லால் உடைத்து பொதுப்பணித்துறையைச் சேர்ந்த ஊழியர் செல்வத்தை தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் தலைக்காட்டைச் சேர்ந்த ரஜினி(வயது40), தலைக்காடு மாரியம்மன் கோவில் தெருவை சார்ந்த அன்பழகன் மகன் மணிகண்டன்(29), அதே பகுதியை சேர்ந்த செவன்தான் மகன் மாதவராஜா(37), சுப்பிரமணியன் (50) உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்தநிலையில் வழக்கு தொடர்ந்த மாதாராமனை 4 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் தலைக்காட்டைச் சேர்ந்த வேணுகோபால்(54), அவருடைய மகன் ஜெனார்த்தான் (18), 17வயது சிறுவன் ஒருவன், மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (31) உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story