ஊரணிபுரம் வர்த்தக சங்க தலைவர் மீது வழக்குப்பதிவு
கந்து வட்டி தடுப்பு சட்டத்தில் ஊரணிபுரம் வர்த்தக சங்க தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரத்தநாடு:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் கலியரான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சந்திரபோஸ் (வயது65), இவர் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தஞ்சை மாவட்டம், ஊரணிபுரம் வர்த்தக சங்கத் தலைவர் வி.ஆர்.இளங்கோ என்பவரிடம் 3 சதவீத வட்டிக்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் வாங்கியதாகவும், அந்தப் பணத்தை 3 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும், ஆனாலும் வி.ஆர்.இளங்கோ வட்டி அதிகம் கேட்டு தகாதவார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுவதாக கூறியிருந்தார்.
இந்த புகார் மனு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் இந்த புகார் மனு குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து, சந்திரபோஸ் புகாரின் பேரில் திருவோணம் போலீசார் ஊரணிபுரம் வர்த்தக சங்கத் தலைவர் வி. ஆர்.இளங்கோ மீது கந்துவட்டி தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.