'ஜெயிலர்' படத்துக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு


ஜெயிலர் படத்துக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு
x

‘ஜெயிலர்’ படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த 10-ந்தேதி வெளியானது. இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும். இந்த படத்துக்கு வழங்கப்பட்ட 'யுஏ' சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எம்.எல்.ரவி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர். அப்போது இந்த திரைப்படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு லட்சக்கணக்கான பேர் பார்த்திருப்பார்கள் என்று மனுதாரர் தரப்பு வக்கீல் பதில் அளித்தார்.

விளம்பர வழக்கு

மேலும், ''ஏ'' சான்றிதழ் வழங்கப்பட வேண்டிய இந்த திரைப்படத்திற்கு, 'யுஏ' சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. படத்தில் வன்முறை காட்சிகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன'' என்றும் மனுதாரர் வக்கீல் வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், ''அனைத்து திரைப்படங்களிலும் வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எந்த திரைப்படத்தில் வன்முறை அதிகம் உள்ளது, எந்த திரைப்படத்தில் குறைவாக இருக்கிறது என்று எப்படி வகைப்படுத்த முடியும்? இது பொதுநல வழக்கு அல்ல, விளம்பர நல வழக்கு'' என்று நீதிபதிகள் கூறினர்.

இதையடுத்து, மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story