சிறப்பு பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி வழக்கு: அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


சிறப்பு பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி வழக்கு: அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x

சிறப்பு பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி வழக்கு: அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் பி.புகழேந்தி தாக்கல் செய்துள்ள மனுவில், "பூந்தமல்லி, திருச்சி, தஞ்சாவூர், சேலம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, தர்மபுரி, கடலூர் ஆகிய 10 இடங்களில் செயல்படும் பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளிகளில் 60 சதவீதத்துக்கும் மேலான பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாக விடப்பட்டுள்ளன. இதில், 5 பள்ளிகளில் முதல்வர் பணியிடம் காலியாக உள்ளது. இதுதவிர 14 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களில் 5 பேரும், 20 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 10 பேரும், 74 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 13 பேரும் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த பள்ளிகளுக்கென தனியாக கல்வி அதிகாரி யாரும் நியமிக்கப்படவில்லை.

ஆசிரியர் பணியிடங்கள் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வெகுவாக பாதிப்படைந்து வருகின்றனர். எனவே, கல்வி உரிமைச் சட்டப்படி இ்ந்த பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் முதல்வர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, இந்த பள்ளிகளை முழுவீச்சில் செயல்பாட்டுக்கு கொண்டுவர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், தமிழ்நாடு அரசு அக்டோபர் 10-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story