பொதுநலன் போர்வையில் தொடரும் வழக்குகளை மிகுந்த எச்சரிக்கையுடன் விசாரிக்க வேண்டி உள்ளது -ஐகோர்ட்டு கருத்து


பொதுநலன் போர்வையில் தொடரும் வழக்குகளை மிகுந்த எச்சரிக்கையுடன் விசாரிக்க வேண்டி உள்ளது -ஐகோர்ட்டு கருத்து
x

“பொதுநலன் போர்வையில் தொடரும் வழக்குகளை மிகுந்த எச்சரிக்கையுடன் விசாரிக்க வேண்டி உள்ளது” என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.

மதுரை,

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கருணாநிதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக பாக்கியமேரி உள்ளார். அவர், எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். எங்கள் கிராம பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரை பல வழிகளில் தண்டிக்கிறார். எனவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும் பலன் இல்லை. எங்கள் மனுவின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

புகார் மீது விசாரணை

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, தலைமை ஆசிரியைக்கு எதிரான புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் தலைமை ஆசிரியைக்கு ஆதரவாக புதுக்குடியிருப்பு கிராம மக்கள் சார்பில் முத்துக்குமார் என்பவர் மனு அளித்தார். எனவே புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறான தகவல் என்று வாதாடினார்.

உத்தரவிட முடியாது

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளின் அதிகாரத்தை பயன்படுத்தி பொதுநல வழக்குகளில் பல்வேறு முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அந்த வகையில் பொதுநல வழக்குகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே பொதுநலன் என்ற போர்வையில் தனிப்பட்ட விரோதத்துக்கு பழிவாங்கும் வகையிலும், வேறு சில நோக்கங்களுக்காகவும் வழக்கு தொடர்கின்றனரா? என எச்சரிக்கையுடன் பொதுநல வழக்குகளை விசாரிக்க வேண்டியுள்ளது.

அந்த வகையில் பள்ளி தலைமை ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, இந்த வழக்கு பொதுநல வழக்கு என்ற வகையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதன்பேரில் தலைமை ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட முடியாது. இந்த வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.


Next Story