கண்வலிகிழங்கு, விதைகள் அமோக விளைச்சல்


கண்வலிகிழங்கு, விதைகள் அமோக விளைச்சல்
x

இடையக்கோட்டை பகுதியில் கண்வலிகிழங்கு, விதைகள் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

திண்டுக்கல்

கண்வலி கிழங்கு சாகுபடி

திண்டுக்கல் மாவட்டம் இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, அய்யம்பாளையம், பாறைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கண்வலி கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கண்வலிகிழங்கு என்பது, தமிழக அரசின் மலரான செங்காந்தள் செடி தான். செங்காந்தள் மலர்களை உற்று நோக்கினால் கண்கள் வலிக்கும் என்பதால் அப்பெயர் ஏற்பட்டது என்று சொல்கின்றனர்.

கண்வலிகிழங்கு செடியின் தாவரவியல் பெயர் குளோரியோசா சுப்ர்பா என்பதாகும். இது, கொடி வகையை சேர்ந்தது. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பர்மா, இந்தோனேசியா, மலேசியா, தென்சீனா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் கண்வலி கிழங்கு சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது.

அமோக விளைச்சல்

கொடிய விஷத்தன்மை கொண்டது கண்வலி கிழங்கு. அதேநேரத்தில் இதன் விதை, கிழங்கு மற்றும் இலைகளில் இருந்து புற்றுநோய், அல்சர், விஷக்கடி, குடற்புழு, வயிற்றுப்புண், மூட்டுவலி, தொழுநோய், சரும வியாதிகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

தற்போது இடையக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள தோட்டங்களில் கண்வலி கிழங்கு மற்றும் விதைகள் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. அதேநேரத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கண்வலி விதை ஒரு கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்தது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ விதை ரூ.1,450 முதல் ரூ.1,600 வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகவில்லை என்று கூறப்படுகிறது.

அரசு கொள்முதல்

இதுகுறித்து விவசாயி ரகுபதி கூறுகையில், இடையக்கோட்டை பகுதியில் விளைகிற கண்வலி கிழங்கு மற்றும் விதைகளை ஈரோட்டில் இருந்து வரும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். ஆனால் வியாபாரிகள் தங்களுக்குள்ளேயே பேசி குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். அந்த விதைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து கூடுதல் லாபம் அடைகின்றனர்.

ஆனால் உரம், பூச்சிமருந்து மற்றும் கூலியாட்களின் சம்பள உயர்வு ஆகியவற்றால் விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசே கண்வலி கிழங்கு மற்றும் விதைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.


Next Story