3 வயது குழந்தைக்கு சாதி, மதம் சாராதவர் சான்றிதழ்
கோவையில் முதன்முறையாக 3 வயது குழந்தைக்கு சாதி, மதம் சாராதவர் சான்றிதழ் வழங்கப்பட்டது
கோவை
கோவையில் முதன்முறையாக 3½ வயது குழந்தைக்கு சாதி, மதம் சாராதவர் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சான்றிதழ்
குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் வேலை வாய்ப்பு என அனைத்திற்கும் சாதி சான்றிதழ் அவசியமானது. எனவே வருவாய் துறை வழங்கும் சாதி சான்றிதழில், சம்மந்தப்பட்டவரின் மதமும் குறிப்பிடப்படும்.
இந்த நிலையில் கோவை சங்கனூர் கே.கே.புதூரை சேர்ந்த நரேஷ் கார்த்திக். இவர் தனது 3½ வயது மகள் வில்மாவிற்கு மதம், ஜாதி சாராதவர் என்ற சான்றிதழை வருவாய் துறை மூலம் பெற்று உள்ளார்.
கோவையில் முதல்முறை
இது குறித்து நரேஷ் கார்த்திக் கூறியதாவது:
மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தில் சாதி, மதம் குறிப்பிட தேவையில்லை என்று தமிழக அரசு கடந்த 1973-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்து உள்ளது. ஆனாலும் பள்ளி களில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சாதி சான்றிதழ் கேட்கின்றனர்.
சாதி, மதம் ஒழிந்தால் மட்டுமே மக்களிடம் ஏற்றத்தாழ்வு நீங்கும். அதை கருத்தில் கொண்டு எனது மகளுக்கு கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் சாதி, மதம் சாராதவர் என்ற சான்றிதழ் பெற்று உள்ளேன். கோவை மாவட்டத்தில் முதல், முறையாக இதுபோன்ற சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
வேலைக்காக விண்ணப்பிக்கும் போது எம்.பி.சி.,பி.சி., ஓ.சி., எஸ்.சி., எஸ்.டி., ஆகிய பிரிவுகளை குறிப்பிடுகின்றனர். அதில் என்.சி. எனப்படும் நோ காஸ்ட் (சாதி சாராதவர்) என்ற பிரிவை சேர்க்க வேண்டும்.
அப்போது தான் சாதி, மதம் சாராதவர் விண்ணப்பிக்க எளிதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.