2 மாணவிகளுக்கு பழங்குடியின இருளருக்கான சாதிச்சான்றிதழ்
கல்லூரியில் சேர 2 மாணவிகளுக்கு பழங்குடியின இருளருக்கான சாதிச்சான்றிதழ் கலெக்டர் பழனி வழங்கினார்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவ- மாணவிகள் கல்லூரியில் சேர்வதற்காக இணையதளம் மூலமாக சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களிலும் இணையதளம் மூலம் 10,515 சாதிச்சான்றிதழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 8,865 பேருக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்கவும், 11,428 வருமானச் சான்றிதழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 9,714 பேருக்கு வருமானச்சான்றிதழ் வழங்கவும், 9,795 இருப்பிடச்சான்றிதழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 8,685 பேருக்கு இருப்பிடச்சான்றிதழ் வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள விண்ணப்பதாரரின் மனுக்கள் உரிய விசாரணைக்கு பின்னர் ஒருவார காலத்திற்குள் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் வானூர் தாலுகா தென்கோடிப்பாக்கத்தை சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகள்களான சாருமதி, சரண்யா ஆகியோர் கல்லூரி மேற்படிப்புக்காக சாதிச்சான்றிதழ் கேட்டு இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்கள் உரிய பரிசீலனைக்குப்பிறகு நேற்று 2 மாணவிகளுக்கும் பழங்குடியினருக்கான இருளர் சாதிச்சான்றிதழ்களை கலெக்டர் சி.பழனி வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவா உள்பட பலர் உடனிருந்தனர்.