செஞ்சியில் மனு கொடுத்த மறுநாளே மாணவர்களுக்கு சாதி சான்றிதழ்
செஞ்சியில் மனு கொடுத்த மறுநாளே மாணவர்களுக்கு சாதி சான்றிதழை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
செஞ்சி,
திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், செஞ்சி வழியாக காரில் சென்றார். அப்போது வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கொடுத்த வரவேற்பையும் மனுக்களையும் ஏற்றுக் கொண்டார்.
இதில் செஞ்சி வட்டம் செம்மேடு கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் வாசன், மகள் பூஜா ஆகியோர் தங்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக பட்டியல் இன சான்றிதழை அதிகாரிகள் வழங்க மறுக்கின்றனர். இதனால் எங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மேற்படி மாணவர்களுக்கு பட்டியல் இன சான்றிதழ் தயார் செய்யப்பட்டு அவைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையால் வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
முதல்-அமைச்சர் வழங்கினார்
அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு செஞ்சி வழியாக சென்னை சென்ற போது, செஞ்சி பயணிகள் விடுதிக்கு வந்தார். தொடர்ந்து மனு கொடுத்த மாணவர்களான வாசன், பூஜா மற்றும் அவர்களது பெற்றோரிடம் பட்டியல் இன வகுப்பு சான்றிதழ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, எ.வ. வேலு, செஞ்சி மஸ்தான், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
நீண்ட நாட்களாக சான்றிதழ் பெற முடியாமல் தவித்த மாணவர்களுக்கு மனு அளித்த மறுநாளே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் கையாலேயே சான்றிதழ் வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதில் பூஜா, பிளஸ்-2 முடித்து விட்டு கல்லூரியில் சேர இருப்பதும், வாசன், சத்தியமங்கலம் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.