பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் ஆன்லைன் மூலம் வழங்கப்படும்

பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் என்று கோவையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறினார்.
வடவள்ளி
பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் என்று கோவையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறினார்.
பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட 14-வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியின் நிறைவு நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாநகராட்சி ஆணையர் பிரதாப்குமார், நேருயுவ கேந்திராவின் மாநில இயக்குனர் செந்தில்குமார், பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பயிற்சிகள்
காடுகளை பாதுகாப்பதில் பழங்குடியின மக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தமிழ்நாட்டில் 36-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் பிரிவுகள் உள்ளனர். இவர்களது நலனுக்காகவும் வாழ்க்கை தர மேம்பாட்டிற்காகவும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பழங்குடியின மக்கள் இயற்கை வளங்களிலிருந்து தயாரிக்கும் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதற்காகவும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
பழங்குடியின மக்கள் கல்வி கற்பதில் சிக்கலாக உள்ள சாதி சான்றிதழ் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் விரைவாக சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடனப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
சாதி சான்றிதழ்
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பல பிரிவுகளாக பழங்குடியினர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் மொழி, தொழில், கலாசாரம் ஆகியவை வேறுபடும். இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் கலாசாரங்கள் வேறுவேறாக இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர் என்ற எண்ணம் மேலோங்கும்.
பழங்குடியினர் முன்பு மலைகளில் மட்டுமே வாழ்ந்து வந்த நிலையில் தற்போது மற்ற இடங்களுக்கும் சென்று வாழ்ந்து வருகின்றனர்.
இதனால் சாதி சான்றிதழ் வழங்குவதில் தொய்வு ஏற்படுகிறது. இருந்தும் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் ஆன்லைன் மூலம் வழங்கவும், அவர்களது பெற்றோர்களின் சாதி சான்றிதழ் அடிப்படையிலும், ரத்த பந்தங்களின் சான்றிதழ் அடிப்படையிலும், பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






