கடந்த 1½ ஆண்டுகளில் 11,869 மலைவாழ் மக்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் கலெக்டர் தகவல்
சேலம் மாவட்டத்தில் கடந்த 1½ ஆண்டுகளில் 11,869 மலைவாழ் மக்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம்,
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மழைவாழ் மக்கள்
தமிழ்நாட்டில் மலைவாழ் மக்கள் அதிகம் வசித்து வரும் சேலம், நாமக்கல், திருச்சி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களில் பழங்குடியினர் நல திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் அதிக மலைக் கிராமங்களை கொண்ட மாவட்டமாக சேலம் மாவட்டம் திகழ்கிறது. சேலம் மாவட்டத்தில் 373 மலைக் கிராமங்களில் சுமார் 1 லட்சத்து 67 ஆயிரத்து 47 மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, வாழவந்தி, மாரமங்கலம், குண்டூர், பெரிய கல்வராயன்மலை, சின்ன கல்வராயன்மலை, வடக்குநாடு, தெற்கு நாடு அருநூத்துமலை, புழுதிக்குட்டை, பச்சமலை, சின்ன கிருஷ்ணாபுரம், பெரிய கிருஷ்ணாபுரம், ஜருகுமலை, கோணமடுவு, சூரியூர், குரால்நத்தம், பாலமலை உள்பட மாவட்டடம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மலைவாழ் மக்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.
சாதி சான்றிதழ்
சேலம் மாவட்டத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் குழந்தைகளின் கல்வித்தரத்தினை மேம்படுத்தும் வகையில் 70 அரசு பழங்குடியினர் நல பள்ளிகளும், விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. மலைவாழ் மக்களுக்கும் மற்ற பிரிவினரை போலவே இணையதளம் வாயிலாக சாதிச் சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், மலைவாழ் மக்களுக்கான பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு டிஜிட்டல் கையெழுத்துடன் கூடிய சான்றிதழ் வழங்க உதவி கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த 1½ ஆண்டுகளில் 11 ஆயிரத்து 869 மலைவாழ் மக்களுக்கான பழங்குடியினர் சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மலைவாழ் மக்களுக்கு கறவை மாடு வழங்கும் திட்டம், தொகுப்பு வீடுகள் வழங்கும் திட்டம், தையல் எந்திரம் வழங்கும் திட்டம், பெட்டிக்கடை வைக்கும் திட்டம், பாக்குமட்டை தயாரிக்கும் எந்திரம் வழங்கும் திட்டம், தேனீ வளர்த்தல் திட்டம், பண்ணைக் குட்டை அமைத்தல் திட்டம், பழங்குடியினர் நல வாரிய அட்டைகள் வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகள் தொடர்பான பயிற்சிகள் ஆகியவை மாவட்ட நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நலவாரிய அட்டைகள்
மேலும், இதுவரை 2 ஆயிரத்து 61 பேருக்கு பழங்குடியினர் நல வாரிய அட்டைகளும், 956 நபர்களுக்கு தனிநபர் வன உரிமைப் பட்டாக்களும், 68 நபர்களுக்கு சமூக வன உரிமைப் பட்டாக்களும் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.