ஆமணக்கு விதைகள் அறுவடை பணி தீவிரம்
வெம்பக்கோட்டை பகுதிகளில் ஆமணக்கு விதைகள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குவிண்டால் ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை பகுதிகளில் ஆமணக்கு விதைகள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குவிண்டால் ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆமணக்கு சாகுபடி
வெம்பக்கோட்டை ஒன்றியம் சுப்பிரமணியபுரம், சல்வார்பட்டி, இறவார்பட்டி, கொம்மங்கிபுரம், மடத்துப்பட்டி, நதிக்குடி, கோட்டைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆமணக்கு பயிரிடப்பட்டுள்ளது.
அவ்வப்போது பெய்த மழை காரணமாக 2 மாத பயிரான ஆமணக்கு நன்கு விளைந்து உள்ளது. இதையடுத்து விருதுநகர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நேரில் இங்கு தந்து ஆமணக்கை வாங்கி செல்கின்றனர். ஆமணக்கு கிலோ ரூ. 70 முதல் குவிண்டால் ரூ.7,000 வரை வாங்கி செல்கின்றனர்.
அதிக விளைச்சல்
இதுகுறித்து மடத்துப்பட்டி விவசாயி கோபால்சாமி கூறியதாவது:-
விருதுநகர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் தயாரிக்க ஆமணக்கின் தேவை அதிகமாக இருப்பதால் இப்பகுதியில் ஆமணக்கு ஏராளமாக பயிரிட்டுள்ளோம்.
அவ்வப்போது பெய்த மழை காரணமாக சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு எதிர்பார்த்த விளைச்சல் கிடைத்துள்ளது. ஆமணக்கு விலை கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் சென்ற ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலை தான் இந்த ஆண்டும் கிடைத்துள்ளது. இதனால் சிறிது ஏமாற்றம் அடைந்துள்ளோம்.
தரம் பிரிப்பு
தற்போது அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 4 மாதம் வரை அறுவடை செய்யப்படும் ஆமணக்கு விதைகள் தரம் பிரிக்கப்பட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.