சீர்காழி நகர் பகுதியில் சுற்றித்திரிந்த கால்நடைகள் பிடிப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சீர்காழி நகர் பகுதியில் சுற்றித்திரிந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
சீர்காழி
போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தென்பாதி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தேர் மேலவீதி, ரெயில்வே ரோடு, சிதம்பரம் சாலை, ஈசானிய தெரு, மயிலாடுதுறை சாலை, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் கால்நடைகள் இரவு பகலாக சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள், உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர்.
மேலும் நேற்று முன்தினம் தென்பாதி சாலையில் நடந்து செல்பவர்களை மாடுகள் முட்டி சிறு விபத்தும் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் ஆகியோருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
'தினத்தந்தி' செய்தி எதிரொலி
இந்நிலையில் இது தொடர்பாக நேற்று முன்தினம் சீர்காழி நகர் பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று முன் தினம் இரவு சீர்காழி நகர் பகுதியில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் சுற்றி திரிந்த 8 கால்நடைகளை நகராட்சி பணியாளர்கள் உதவியோடு பிடித்து வாகனத்தில் ஏற்றி வந்து சீர்காழி நகராட்சி வளாகத்தில் அடைத்து வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து கால்நடைகளை மீட்க வந்த உரிமையாளர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் பெற்றுக்கொண்டு இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் திரியவிட்டால் போலீஸ்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். சீர்காழி நகர் பகுதியில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக சுற்றி திரிந்த கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்திய நகராட்சி ஆணையர் மற்றும் நகர சபை தலைவருக்கும் ,செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.