கால்நடைகளை ஏமாற்றும் தண்ணீர் தொட்டி...
கால்நடைகளை ஏமாற்றும் தண்ணீர் தொட்டி...
கோடை காலத்தில் தண்ணீருக்காக அங்கும் இங்கும் மக்கள் அலைமோதுவது வாடிக்கையாகிவிட்டது.தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் வீதிகளில் இறங்கி பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. தங்க இடம் இல்லாவிட்டால் உயிர் வாழலாம். உணவு இல்லாவிட்டால்கூட ஒருசில நாட்கள் உயிர் வாழ்ந்துவிடலாம். ஆனால், யாராக இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் எவராலும் உயிர் வாழவே முடியாது.
பேசத்தெரியும் நமக்கு.. தாகம் ஏற்பட்டால் தண்ணீரை கேட்டு வாங்கி குடித்து விடுவோம். ஆனால் கால்நடைகளால் அப்படி கேட்க முடியாது. அவற்றை வளர்ப்பவர்கள், அதற்கு என்ன தேவை என்பதை அறிந்து உடனடியாக அவற்றை கொடுத்து விடுவார்கள்.
மேய்ச்சலுக்காக செல்லும் கால்நடைகள் தண்ணீர் குடிக்க ஆங்காங்கே தொட்டிகள் கட்டப்பட்டு அங்கு தண்ணீர் ஊற்றப்பட்டு இருக்கும். அதுபோன்றுதான் கோவையை அடுத்த நரசீபுரம் அருகே உள்ள கோட்டைக்காடு என்ற பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை ஒட்டி இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி சார்பில் கால்நடைகள் தண்ணீர் குடிக்க தொட்டி கட்டப்பட்டது.
3 அடி ஆழம் 10 அடி அகலம் கொண்ட இந்த தொட்டியில் மேய்ச்சலுக்காக செல்லும் கால்நடைகளுக்கு தண்ணீர் ஊற்றப்படும். ஆனால் தொட்டி கட்டப்பட்ட பின்னர் அதில் தண்ணீர் ஊற்ற மறந்து விட்டனர். இதனால் மேய்ச்சலுக்காக செல்லும் கால்நடைகள் தாகத்துடன் இந்த தொட்டி அருகே வரும்போது, அதில் தண்ணீர் இல்லாததால் ஏமாந்து செல்லும் நிலை நீடித்து வருகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, வெயிலின் தாக்கம் மனிதர்களுக்கு மட்டுமல்ல கால்நடைகளுக்கும் அதிகமாகதான் இருக்கிறது.
இந்த வகையில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு தாகம் தீர்க்க தொட்டி மட்டும் கட்டினால் போதாது... அதில் தண்ணீர் நிரப்புவது மிக முக்கியம். எனவே உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கிராமப்பகுதியில் கட்டப்பட்டு உள்ள இதுபோன்ற தொட்டிகளில் தண்ணீர் கட்டாயம் நிரப்ப வேண்டும். வெறுந்தொட்டியாக விட்டு விட்டால் கால்நடைகள் தாகத்துடன் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளதுஎன்றனர்.