காவிரி விவகாரம்: கடைசி வாய்ப்பு சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது மட்டும்தான் - அமைச்சர் துரைமுருகன் பேட்டி
காவிரி விவகாரத்தில் கடைசி வாய்ப்பு சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது மட்டும்தான் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சென்னை,
காவிரி விவகாரம் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு, அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட வலியுறுத்தப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்த வழக்கு வருகிற 21-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுகிறதா? என பார்க்க வேண்டும்.
இல்லையெனில் தற்போது நிலை குறித்து இணைத்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வேண்டும். காவிரி விவகாரத்தில் கடைசி வாய்ப்பு சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது மட்டும்தான். உச்சநீதிமன்ற விசாரணைக்குப் பிறகு தேவைப்பட்டால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டலாம். காவிரி விவகாரத்தில் ஒவ்வொரு அங்குலத்திலும் கர்நாடக அரசு எதிர்ப்பை பதிவு செய்கிறது. கர்நாடக அரசின் எதிர்ப்பை சந்தித்து, மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத் தருகிறோம்.
தமிழ்நாட்டு அதிகாரிகள் நீர் அளவை ஆய்வு செய்ய கோரிக்கை வைப்போம். தமிழ்நாட்டு விவசாயிகள் பாதிக்காத வண்ணம் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம், நிவாரணம் வாங்கிக் கொடுப்போம்.
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.